தலை சிறந்த ஆல்ரவுண்டர் கபில் தேவ்

கபில் தேவ் இந்திய கிரிக்கெட்டிற்குள் ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில், அதுவும் அதுவரை இந்திய கிரிக்கெட் அணி கண்டிராத ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில் இந்திய அணி நம் பழைய குடும்ப அமைப்பை ஒத்திருந்தது. பேட்ஸ் மேன்கள் கணவர்களைப் போல வேலைக்குப் போய் வருவது மட்டுமே அவர்கள் வேலை மற்றவை அல்ல என்பதைப் போல ரன் எடுப்பதை மட்டுமே அவர்கள் வேலையாகச் செய்வார்கள்.

பீல்டிங் என்பதையே செய்ய மாட்டார்கள் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில் சிறு அழுக்குப் பட்டாலும் அது அவர்களுக்கு இழுக்கு என எண்ணுவார்கள்.

பந்து வீச்சாளர்கள் மனைவி போல

பந்து வீசி பீல்டிங் செய்வார்கள் ஆனால் ரன் எடுக்கமாட்டார்கள். அந்த சமயத்தில் வேலைக்கும் போய், வீட்டு வேலையும் செய்யும் நவநாகரீக மங்கையைப் போல் அணிக்குள் வந்தவர் தான் இந்தியாவின் இணையற்ற ஆல்ரவுண்டர் கபில் தேவ்.

கபில் 16 வயதில் ஹரியானா அணிக்கு ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடிய நேரத்திலே ஜாம்பவான்கள் பலரது கவனத்தை ஈர்த்தார். அவரின் பவுலிவ் வேகமும், பேட்ஸ் மேன்களை திணறடிக்கும் லைன் அண்ட் லெங்த்தும் மெர்சிலிக்க வைத்தது, பெரிய அணிகளுக்கு எதிராக எல்லாம் ஐந்து விக்கெட் சாதனையை சர்வ சாதாரணமாக செய்து வந்தார் இவரை டீம்ல எடுத்தே ஆக வேண்டிய சூழல் தேர்வாளர்களுக்கு வந்தது.

தேசிய அளவிலான பயிற்சி முகாமில் காலையில் மாங்கு மாங்கென்று 20 ஓவர்களுக்கு மேல் வீசி விட்டு வந்தவருக்கு நான்கு சப்பாத்தியும் சப்ஜியும் காத்திருந்தது நான் ஒரு வேகப்பந்து வீச்சாளன் எனக்கு
இது எப்படி போதும்? என கேட்டதற்கு,
அதிகாரிகள் இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளன் என்ற ஜாதியே இல்லை
என்று பதில் அளித்தார்கள்.

அப்படியா கொஞ்சம் இருங்க பாய் ங்குற
அப்படி ஒரு ஜாதியை உருவாக்குகிறேன் என்று மனதிற்குள் சூளுரைத்திருப்பார்.
அந்த வெறி தான் இந்திய அணி கிரிக்கெட் உலகின் முக்கிய அணிகளுள்
ஒன்றாக மாற காரணமாக அமைந்தது.

1978-ல் தன் பத்தொன்பதாவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக கபில்தேவ் அறிமுகமானபோது, இந்திய ரசிகர்கள் அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். இவ்வளவு வேகமாக துல்லியமாக பந்து
வீச நம்மிடமும் ஆட்கள் உள்ளனரா என்பதே அனைவரின் ஆச்சரியமும்.

Read Also ; உலகின் தலை சிறந்த 9 ஆல்ரவுண்டர்கள்

பாகிஸ்தானை கதறவிட்ட கபில்

பாகிஸ்தானுக்கு எதிராக அவரின் பந்து வீச்சைப்பார்த்த உடன் பத்திரிக்கைகள் அவருக்கு வைத்த பெயர் ஹரியானா ஹரிக்கேன். போதாக் குறைக்கு அற்புதமான க்ளீன் ஹிட்டிங் வேறு. அதற்கு முன் நம் இந்திய பேட்ஸ்மேன்கள், தன்னிடம் டியூசன் படிக்கும் மாணவர்கள் கிளாசில் தவறு செய்தால் பட்டும் படாமல் அடிப்பார்களே சில ஆசிரியர்கள் அதுபோலத்தான் அடிப்பார்கள்.

பவுண்டரி என்பதே குறைவாகத்தான் இருக்கும். ஓங்கி அடித்தாலும், எப்படியும் தடுத்து விடலாம் என எதிரணி வீரர்கள் நம்பிக்கையோடு விரட்டுவார்கள்.
ஆனால் கபில்தேவோ தன் மகளுக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவனை அடிப்பது போல் பளார் என்று அடிப்பார். அடித்த உடனே பவுண்டரி எனத் தெரிந்து எதிரணி வீரர்கள் பந்தைத் துரத்த மாட்டார்கள்.வ்

உலககோப்பை வென்று கொடுத்த தலைவன்

இதனால் மக்களிடம் பெரும் அபிமானம் பெற்ற கிரிக்கெட் வீரராக மாறினார் கபில்தேவ். எண்ணி நான்கே ஆண்டுகளில் 1982ல் அப்போதைய கேப்டன் கவாஸ்கர் ஓய்வு எடுத்த ஒரு தொடரில் கேப்டனாக பதவியேற்றார். பின்னர் அந்த ஆண்டு மேற்கிந்திய தொடருக்கு கேப்டனாக
நியமிக்கப்பட்டார். 1983 உலக கோப்பைக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு அந்த கோப்பையை வென்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் பரவ காரணமானார்.

சூட்டோடு சூடாக மேற்கிந்திய அணி, இந்திய சுற்றுப் பயணத்திற்கு வந்து, பைனலில் தோற்ற பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்துவிட்டுப் போனது. அந்த படு தோல்வியின் காரணமாக
கபில்தேவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் கவாஸ்கரிடம் கொடுக்கப்பட்டது.

மீண்டும் 1986ல் கபில்தேவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் அந்நாட்டை டெஸ்ட் தொடரில் வென்று சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவுடன் கிட்டத்தட்ட டெஸ்ட் தொடரை வெல்லும் வரை சென்றார். மழையினால் அது தட்டிப் போனது…பின் 1987 ரிலையன்ஸ் உலக கோப்பையில் அரை இறுதி வரை அணியை இழுத்துச் சென்றார் கபில்தேவ்.

அதனால் மீண்டும் கேப்டன்சியை இழந்து 93-94 சீசன் வரை விளையாடி ஓய்வு பெற்றார். யோசித்துப் பார்த்தால் அவர் இந்திய அணிக்கு கொடுத்ததற்கு ஈடாக எந்த பெரிய பலனையும் பெறவில்லை.
அவரை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் இந்திய அணி நிர்வாகம் செய்யவில்லை. எவ்வளவு வெறி கொண்டு போட்டாலும் முட்டிக்கு மேல் பந்து எழும்பாத ஆடுகளங்கள் மட்டும் இருக்கும் நாட்டில் யார்தான் வேகப்பந்து வீச்சாளராக வர விரும்புவார்கள்?

அப்படி ஒருத்தன் முனைப்போடு வந்தவரை முடிந்தவரை தட்டிக் கழிக்கவே முயன்றார்கள் வேகப் பந்து வீச்சாளருக்கு இன்னொரு முனையிலும் நல்ல துணை இருந்தால் தான்
பேட்ஸ் மேன்களுக்கு நெருக்கடியைக் கொடுத்து விக்கெட் வீழ்த்த முடியும். உதாரனத்திற்கு டென்னிஸ் லில்லி – ஜெப் தாம்சன் முதல் வாசிம் அக்ரம் – வக்கார் யூனூஸ், அம்புரோஸ் – வால்ஷ், அலன் டொனால்ட் – ஷான் போலக், மெக்ராத் – ப்ரெட் லீ என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் கபில்தேவ் தன் உச்சக்கட்ட பார்மில் இருந்த போது அப்படி ஒரு துணை அமையவே இல்லை. மதன்லால், மொஹிந்தர் அமர் நாத் போன்றவர்கள் தான் அவருக்கு அடுத்த ஓவரை
வீசுவார்கள்.

ஒரு முறை விவியன் ரிச்சர்ட்ஸ், மதன்லாலிடம் சென்று, ஆப் ஸ்பின் போடுவதற்கு எதற்கு இவ்வளவு தூரம் ஓடி வருகிறீர்கள் எனக் கேட்டதாக கூடச் சொல்வார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ரோஜர் பின்னி, சேட்டன் சர்மா என வந்தாலும் அவர்களும் தங்கள் சிறப்பை
தொடர்ச்சியாக கொடுக்கவில்லை.

ஒற்றை ஆளாக தொடர்ந்து பந்து வீசி, காலில் அறுவை சிகிச்சை வரை போனது. அதனால் அவர் வேகம் குறைந்த போது அவுட் ஸ்விங்கர் என்னும் ஆயுதத்தை எடுத்தார். இந்திய மைதாங்களில் அது பெரும் பலனை அளிக்காவிட்டாலும் வெளிநாட்டு மைதானங்களில் நல்ல பலனைத் தந்தது.1991-92ல் அவரது கடைசி ஆஸ்திரேலிய பயணத்தில் கூட ஆலன் பார்டர் போன்ற முண்ணனி வீரர்கள் அலறும் படி இருந்தது அவரது பந்துவீச்சு.

கபில் தேவ் ஓய்வு பெறும் போது டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் (434) எடுத்த பந்து வீச்சாளராக ஓய்வு பெற்றார். ஆறு ஆண்டுகள் கழித்தே அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இதில் பாதிக்கு மேலான விக்கெட்டுகளை உயிரற்ற இந்திய ஆடுகளங்களில் தான் வீழ்த்தினார். சக வீரர்களின் ஒத்துழைப்பின்மை, உடன் வீச தகுதியான பந்துவீச்சாளர் இல்லாதது, கிரிக்கெட் வாரியத்தின் பாரபட்சம் இத்தனையையும் தாண்டித்தான் அவர் இந்த சாதனையைச் செய்தார்.

434 விக்கெட்டுகள் மட்டுமல்ல ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ரன்களையும் டெஸ்ட் மேட்சுகளில் அவர் குவித்திருந்தார். எப்பொழுதெல்லாம் இந்திய அணி தடுமாறுகிறதோ அப்பொழுதெல்லாம் தன் பங்களிப்பை சரியாக செய்து விடுவார்.

தடுமாறியது இந்திய அணி

1986ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு விளையாட வந்திருந்தது, முதல் இன்னிங்ஸில் அவர்கள் இமாலய ஸ்கோரை குவிக்க, அடுத்து விளையாடிய இந்திய அணி தடுமாறியது.

கபில்தேவ், மனீந்தர் சிங் உள்ளிட்ட பந்து வீச்சாளர்களை அடுத்த முனையில் நிறுத்தி 119 ரன்களை குவித்து பாலோ ஆனில் இருந்து காப்பாற்றினார். 1991ல் இந்தியா, இங்கிலாந்திற்கு சென்றிருந்த போது, பாலோ ஆனை தவிர்க்க 24 ரன்கள் தேவை, ஒரு விக்கெட் மட்டுமே கைவசம். அந்த ஒவரின் கடைசி நான்கு பந்துகளில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை அடித்து பாலோ ஆனில் இருந்து இந்தியாவை காப்பாற்றினார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் மறுமுனையில் நின்ற ஹிர்வாணி அவுட்.

1983 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறிய போது 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்த ஒரு சம்பவமே அவர் பெயரை காலம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும்.

கபில் தேவின் பௌலிங், பேட்டிங் போல குறிப்பிட வேண்டிய ஒன்று அவரது பீல்டிங். 1983 உலக கோப்பை பைனலில் அவர் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிடித்த ரன்னிங் கேட்ச் உடனடியாக எல்லோரது நினைவுக்கும் வரும். அவுட்பீல்டில் சிறப்பாக பீல்ட் செய்யக்கூடியவர் கபில் தேவ், அப்போதைய இந்திய அணி வீரர்கள் பவுண்டரி லைனில் இருந்து பந்தை எறிந்தால் அது விக்கெட் கீப்பரிடம் வரும் பொழுது, ஸ்டேசனில் வந்து நிற்கும் பேசஞ்சர் டிரெய்னின் வேகத்தில் தான் வந்து சேரும். ஆனால் கபில் தேவ் ஒன் பவுன்ஸில் விக்கெட் கீப்பரின் இடுப்புக்கு வந்து சேரும் படி எக்ஸ்பிரஸ் வேகத்தில் எறிவார்.

Read Also ; லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீ சாம்பலான வீடுகள்

கபில் தேவிற்கு கௌரவம் கொடுக்காத கிரிக்கெட் வாரியம்

கபில்தேவ் ஓய்வு பெற்ற பின்னும் அவருக்கு எந்த வித கௌரவமும் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுக்கவில்லை. இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ சி எல்)
20-20 போட்டிகள் நடைபெற முக்கிய காரணியாக இருந்தார். அதற்கு மைதானங்கள் கிடைக்க விடாமல் இடையூறு செய்ததோடு, அதில் விளையாடும் வீரர்களுக்கும் எதிர் காலத்தில் வாய்ப்பு இல்லை என BCCI
மிரட்டியது. பின் தானே இந்தியன் பிரிமியர் லீக்கைத் தொடங்கியது.

1983க்குப் பின் மூலை முடுக்கெல்லாம் இந்தியாவில் கிரிக்கெட்டை மக்கள் ஆட ஒரு காரணமாய் இருந்தது, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நம்மால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் எனக் காட்டியது, எக்கச்சக்கமாக இல்லாவிட்டாலும் வேகப்பந்து வீசி நம்மால் சாதிக்க முடியும் என பலர் வர உந்து சக்தியாக இருந்தது, இப்போது கிரிக்கெட் வாரியம் ஐ பி எல் ஆரம்பித்து கோடி கோடியாய் சம்பாதிக்க ஒரு காரணமாய் இருந்தது என கபில்தேவின் சாதனைகள் பல.

ஆனால் குயுக்தி, குள்ள நரித்தனம் எதுவுமில்லாத சுத்த வீரனான கபில் தேவிற்கு எந்த பெரிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அவரின் விளையாட்டே அப்படித்தான் இருக்கும். என் திறமைக்கு நான் பந்து வீசுகிறேன், நீ ஆடிப்பார். பந்தைப் போடுகிறாயா எப்படி அடிக்கிறேன் பார் என்றே இருக்கும். எதிர்மறை வியூகங்கள், எதிர் அணியை வெறுப்பேற்றுவது போன்ற
செயல்களை செய்யாமல் கிரிக்கெட்டை நேசித்து ஆடிய வீரன் கபில் தேவ்.

நெஞ்சுக்கு பவுன்சர் போட்டால், குழி தோண்டி படுத்துக் கொள்கிற பேட்ஸ்மென்கள் இருந்த
காலத்தில், பவுன்சரைக் கண்ட உடன் மாதக்கடைசியில் ஒன் வேயில் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வருபவரைக் கண்டால் எப்படி ட்ராபிக் கான்ஸ்டபிளுக்கு கண்கள் மின்னுமோ, அதுபோல் கண்கள் மின்ன, ஓரடி பின் சென்று, வலது காலால் மைதானமே அரை இன்ச் உள்ளே போகும் படி ஆக்ரோசமாக அழுத்தி, இடது காலை தூக்கி நடராஜர் நர்த்தனம் போல் நிறுத்தி சண்ட மாருதமாய் பேட்டை சுழற்றுவார் கபில்தேவ். அப்போது ஸ்கொயர் லெக்கிற்கும் பைன் லெக்கிற்கும் இடையே எத்தனை பீல்டர்களை நிறுத்தினாலும் பந்து அவர்களை முறியடிக்கும்.

அந்த நேரத்தில் அவரின் ஆட்டத்தைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளத்தில் கபில்தேவிற்கு ஓரிடம் இருக்குமே அதை எந்த நிர்வாகமும் அவருக்கு கொடுத்து விட முடியாது.

இந்திய மக்கள் கொண்டாடிய ஒரு மாபெரும் கிரிக்கெட் வீரனை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டாட மறந்தது தான் வேதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *