பும்ரான்னா பிளவர் இல்ல பயர் என மீண்டும் நிரூபித்த தருணம். 3வது ஓவர் பும்ரா வீசுகிறான்.. ஒரு முனையில் கோன்ஸ்டாஸ், பேட்டிங் முனையில் ஆடுகிறான் கவாஜா.
5வது பால் கவாஜா பேட்டிங் ஆட தமாதிக்குறான்..
புவுலிங் போட தயாராக இருந்த பும்ரா அதிருப்தி ஆக.
இந்த சின்ன பயல் கோன்ஸ்டாஸ் பும்ராட்ட வார்த்தையை விட்டு வம்பிழுக்கிறான்..
அப்படியா வாடா மகனே
என பும்ரா அடுத்த பாலே கவாஜாவை தட்டி தூக்கி விக்கெட் எடுத்துட்டான்..
ஒரு ஒவர் ரெண்டு ஒவர்லாம் இல்ல.
வம்பிழுத்த அடுத்த பந்தே விக்கெட்டை தூக்கிட்டான் பும்ரா.அன்றைய நாளின் கடைசி பந்தில் விக்கெட் அது..
விக்கெட் எடுத்துட்டு யாரும் கவாஜாவை ஒன்னும் சொல்லல மொத்த டீமூம் ஓடுனது கோன்ஸ்டாஸை பார்த்து தான்..
சினிமாவாக இருந்தால் அவன் தானடா உன்ன திட்டினான் என்ன ஏன்டா அவுட்டாக்குன என கவாஜா கேட்டிருந்தால் …தா அடுத்து அவன் தான்டா என பும்ரா பஞ்ச் டயலாக் தெறிக்க விட்டிருப்பான்…
தாங்கஸ்டா கோன்ஸ்டா.
சோர்ந்து கிடக்குற
இந்திய டீம்மை
ஸ்லெட்ஜிங்கலா ஒன்னு சேர்த்துட்டு இருக்கிறான் கோன்ஸ்டா.
19 வயசு பையனை போய்.. என கண்ணை கசக்கும் இங்க இருக்க கிருக் எக்ஸ்பர்ட்ஸ் மாற்று பாதையில் செல்லவும்..
இப்படி பந்து வீச்சில் பல தரமான சம்பவங்களை இந்திய அணிக்காக செய்து வரும் பும்ராவின் பத்து வீச்சு யுக்தியை அலசி ஆராய்வோம் வாருங்கள்.
பும்ராவும் அவருடைய நெம்பு கோல் மற்றும் சவுக்கு யுக்தியும்
ஜஸ்ப்ரித் சிங் பும்ராவின் பந்து வீச்சு குறித்து
சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த
ஊடகவியலாளர் இயான் மெளரிஸ் என்பவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இவர் பந்தை எறிகிறார் என்று கூறவில்லை எனினும் இவரது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தனது எக்ஸ் தளத்தில் பேசியிருக்கிறார்.
இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த
எந்த பந்து வீச்சாளரும் – ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பின் இது போன்ற விம்ரசனங்களுக்கு ஆளாகுவது இது முதல் முறையன்று.
இதற்கு முன் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னரே திரு முத்தையா முரளிதரனுக்கு
ஆஸி அம்பயர் ஹேர் என்பவர் தொடர்ந்து நோ பால் கொடுத்து கொண்டே இருந்தார் பிறகு அர்ஜுனா ரணதுங்கா போட்டியை ஆட மறுத்து அணியுடன் வெளியேறியது நம் நினைவுகளில் இன்னும் நீங்காமல் இருக்கிறது.
இந்நிலையில் பும்ராவின் பந்து வீச்சில் அப்படி என்ன சிறப்பான அம்சங்கள் இருக்கின்றன?
எது அவரை ஏனைய வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து தனித்துவப் படுத்துகிறது என்பதை விவரிக்க முயல்கிறேன்
Read Also ; 2024-ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த கார்கள்
ரன் அப்
ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு
மூன்று விசயங்கள் முக்கியம்
முதலில் அவர் பந்து வீசுவதற்கு ஓடி வரும்
தூரம். இதை “ரன் அப்” என்கிறோம்.
ஆற்றலின் தத்துவத்தைப் பொருத்தவரை,
ஒரு இடத்தில் உருவாகும் ஆற்றலை மற்றொரு இடத்துக்கு கடத்தலாம் அல்லது மற்றொரு ஆற்றலாக உருமாற்ற முடியும்.
நமது மோட்டார் சைக்கிளைப் பொருத்தவரை
பெட்ரோலை எரித்து கிடைக்கும் வெப்ப ஆற்றலை – இயங்கு ஆற்றலாக மாற்றி
மோட்டார் சுற்றுகிறது. மோட்டார் சுற்றும் விசையைக் கொண்டு அதனுடன் பொருத்தப்பட்ட சக்கரங்கள் சுழல்கின்றன.
அதே போல
பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள்
தங்களது பந்துக்கான வேகத்தை,
அவர்களது வேகமான முன்-ஓட்டத்தில் இருந்தே பெறுகின்றனர்.
இதன் வழியாக “மொமண்ட்டம்” எனும் முன் நோக்கிய வேகத்தைப் பெருகின்றனர்.
அந்த வேகத்தை அவர்களது பந்து வீசும் கரங்களில் கடத்தி பந்தின் வேகத்தை அதிகரிக்கின்றனர்.
உலகின் வேகமான பந்தை வீசிய வேகப்பந்து வீச்சாளன் சோயப் அக்தர் கிட்டத்தட்ட பவுண்டரி லைனுக்கு சில மீட்டர்கள் முன் இருந்து ஓடி வருவதை நாம் கண்டிருக்கிறோம்.
ஆனால் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு இத்தகைய தேவையில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் போல வெறுமனே 8 முதல் 10 தப்படிகளிலேயே
பந்து வீச்சுக்குத் தயாராகி விடுகிறார்.
இதே போல குறைவான முன் ஓட்டத்தை கடைபிடித்த முக்கியமான பவுலர் – வாசிம் அக்ரம் ஆவார்.
சரி இத்தகைய குறைவான ஓட்டத்தின் மூலம் வேகத்தைப் பெற இயலாது எனும் போது எங்கிருந்து பந்திற்கு உந்து சக்தி கிடைக்கிறது?
இதற்கு அவர் உபயோகப்படுத்தும்
வழிமுறை என்பது
தான் பந்து வீசும் கிரீஸை அடையும் போது வைக்கும் வலது காலை நெம்புகோல் போல
பலமாக தரையில் ஊன்றச் செய்கிறார்.
அவ்வாறு பலமாக தரையில் ஊன்றும் போது நெம்புகோலின் தத்துவப்படி
அது வரை ஓடி வந்ததால் அவர்களது கால்களுக்குக் கிடைத்த உந்து சக்தி முழுமையும் அப்படியே நின்று
முழுமையாக அவரது உடலின் மேற்பகுதிக்கு கடத்தப்படுகிறது.
இது மூலமாக
குறைவான தூரம் ஓடி வந்தாலும்
அவரால் வேகமான பந்துகளைத் தொடர்ந்து வீச முடிகிறது.
குறைவான தூரம் ஓடுவதால்,
நீண்ட நேரம் தொடர்ந்து பந்து வீச முடிகிறது.
டெஸ்ட் – டி20 – ஒரு நாள் போட்டி என்று பாகுபாடு இல்லாமல் சுழற்பந்து வீச்சாளர் போல சோர்வடையாமல் பல ஸ்பெல்களை அவரால் வீச முடிகிறது.
மேலும் அவரது பந்துக்கு வேகம் சேர்ப்பவை
அவரது மையப்பகுதி தசைகள் மற்றும் அவரது தோள்பட்டையின் வலிமையும் ஆகும்.
இவ்வாறு ஓடி வந்த பின் பந்தை
எந்த இடத்தில் விடுவிக்கிறார் என்பதைப் பொருத்தும் மட்டை வீச்சாளர்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
எப்படி?
அவர் பந்தை விடுவிக்கும் போது அவரது முழங்கை மூட்டுகள்
இன்னும் அதிக டிகிரி கோணத்தில் விரிந்து (HYPER EXTENSION) கொடுக்கின்றன. .
மேலும் தனது மணிக்கட்டு பகுதியையும் சற்று கோணலாக வைத்துக் கொண்டு பந்தை விடுவிக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால்
ஏனைய பந்து வீச்சாளர்களை விடவும்
பேட்ஸ்மேன்களுக்கு அரை மீட்டர் அருகில் பந்தை விடுவிக்கிறார்.
இதுவும் ஒரு அச்சுறுத்தல் ஆகும்.
பந்தை விடுவிக்கும் போது அவரது கைகள்
பிட்சுக்கு செங்குத்தாக இருக்கும்.
ஆனாலும் அவரது கைகள் சற்று வளைந்து பந்தை வெளிப்படுத்தும்.
பந்தை வெளிப்படுத்தும் போது அவரது மணிக்கட்டை வைத்து சவுக்கை சுழற்றும் போது கிடைக்கும் விசையை உருவாக்குகிறார்.
பேட்ஸ்மேன்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சாளரின் கைகளைப் பார்த்து
பந்து எப்போது ரிலீஸ் ஆகும் என்பதைக் கணித்து அதற்கேற்றவாறு பேட்டை சுழற்றுவார்கள்.
மேலும் சொரசொரப்பான பகுதியை எந்தப் பக்கம் வைத்து பவுலர் பந்து வீசுகிறார் / பளபளப்பான பகுதியை எந்தப் பக்கம் வைத்து வீசுகிறார் என்பதையும் பார்த்து
பந்து எந்தப் பக்கம் திரும்பும் என்பதையும் கணித்து ஆடுவார்கள்.
ஆனால் பும்ரா விசயத்தில்
அவரது கைகள் வானத்தை நோக்கி இருக்கும்.
இதை வைத்து பந்து நன்றாக எழும்பும்
ஷார்ட் பிட்ச் ஆகும் என்று எதிர்பார்த்தால்
அவரது சற்று கோணலான பந்து வீச்சும்
அவரது மணிக்கட்டு பகுதியின் வீச்சு காரணமாக பேட்ஸ்மேன்கள் குழப்பமடைவது உறுதி.
இது பேட்ஸ்மேன்களின் டைமிங்கில் சிக்கல் ஏற்படுத்தும்.
இதற்கடுத்த முக்கிய யுக்தி .
மேக்னஸ் எஃபெக்ட் மற்றும் ரிவர்ஸ் மேக்னஸ் எஃபெக்ட்
அதாவது ஒரு ஊடகத்தின் வழியாக அது காற்றாகவோ அல்லது திரவமாகவோ இருக்கலாம்
அதன் வழியாக சுழன்று கொண்டே செல்லும் உருண்டையான பொருள் போகும் என்றால் அந்தப் பந்து சுழலும் திசைக்கு மேல் புறம் காற்று வேகமாகவும்
அதற்குக் கீழ் புறம் காற்று சற்று வேகம் குறைவாகவும் இருக்கும். இதன் விளைவாக மேற்புற அழுத்தத்தை விட கீழிருந்து மேல் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனால் பந்து காற்றில் கூடுதல் நேரம் பயணிக்கும். இது தான் மேக்னஸ் எஃபெக்ட்.
அதாவது பந்து வீச்சாளர்
தனது விரல்களில் இருந்து பந்து வெளிப்படும் போது
பந்தை , பந்து வீசப்படும் திசை நோக்கி சுழலுமாறு செய்தால் அந்த பந்து காற்றில் பயணிக்கும் போது மேக்னஸ் விளைவு அதன் மீது தாக்கத்தை ஏற்படுத்தி மேல் நோக்கி தள்ளப்பட்டு
அது தரையை அடைய வேண்டிய இடத்தை விட சற்று நேரம் காற்றில் பயணித்து சற்று தாமதமாக தரையில் பிட்ச் ஆகும்.
இதை உபயோகித்து பேட்ஸ்மேன் கணிக்காத வகையில் யார்க்கர்களை வீச முடியும்.
இங்கே பும்ரா செய்வது யாதெனில் தனது மணிக்கட்டுப் பகுதி மற்றும் விரல்களை உபயோகித்து பந்தை வெளிப்படுத்தும் நேரத்தில் பந்தை எதிர் திசையில் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் முறை சுழலுமாறு (BACK SPIN) செய்கிறார்.
இவ்வாறு செய்யும் போது
பந்தின் கீழ்புறத்தில் காற்றின் வேகம் (TURBULENCE) வேகமாகவும்
பந்தின் மேற்புறத்தில் காற்றின் வேகம் குறைவாகவும் இருக்குமாறு செய்து விடுகிறார்.
இதனால் பந்து “ரிவர்ஸ் மேக்னஸ் விளைவால்”
பந்தின் மேற்புற அழுத்தம் அதிகமாகி
கீழ் நோக்கி தள்ளப்படுகிறது.
இதனால் பேட்ஸ்மேன் கூடுதல் நேரம் பந்து காற்றில் பயணிக்கும் என்றெண்ணி காத்திருக்கும் சூழ்நிலையில் பந்து விருட்டென்று குத்தி எழும்பும்
இந்த யுக்தியை உபயோகித்துத் தான் பும்ரா தனது பாதகம் விளைவிக்கும் பந்துகளை வீசுகிறார்.
அதாவது, பேட்ஸ்மேன்கள் இவரது இந்த பந்து சற்று தாமதமாக பிட்ச் ஆகும் என்று எண்ணி காத்திருக்க
இந்த ரிவர்ஸ் மேக்னஸ் விளைவால் பந்து கீழிறங்கி முன்கூட்டியே பிட்ச்சாகி 145 கிலோமீட்டர் வேகத்தில் வந்தால் என்ன தான் செய்ய முடியும்?
ஸ்டம்புகளை பதம் பார்ப்பதும்
எல் பி டபிள்யூக்கள் நடப்பதும் நடந்தேறும்.
பேட்ஸ்மேன்கள் சற்று தாமதமாக பந்தை ஆடும் போது எட்ஜ் ஆகி அவுட் ஆவார்கள்.
டி20 உலகக்கோப்பையில் மார்கோ யான்சென் அவுட் ஆனதும் இப்படி ஒரு பந்தை சரியாக கணிக்க தவறியதால் தான்.
இப்படியாக பந்தை வீசியெறிந்து முடித்ததும் மிக எளிதாக தனது பழைய நிலைக்கும் திரும்பி விடுகிறார். இதையும் பயிற்சி மூலம் சாதித்துள்ளார்.
ஐசிசி சட்டப்படி ஒரு பந்து வீச்சாளர் பந்து வீசும் போது அவரது முழங்கை விரிதல் என்பது 15° கோணத்துக்குள் இருக்க வேண்டும்.
பும்ராவின் முழங்கை ஏனைய பந்து வீச்சாளர்களை விடவும் சற்று விரிதலில் அதிக கோணத்தில் இருப்பினும் ஐசிசி அனுமதித்துள்ள 15°களுக்குள்ளேயே இருக்கிறது.
Read Also ; 2025 ஜோதிடத்தில் சில முக்கிய நிகழ்வுகள்
தோள்பட்டை பலம்
அடுத்து நான் மேலே கூறிய இந்த பந்து வீச்சின் சாதகங்களைப் பெறுவதற்கு
பும்ரா கொடுக்கும் விலை
தனது தோள்பட்டை பகுதிகள் மற்றும்
தனது கீழ் முதுகு பகுதிகளில் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்து வருவது
காயங்களுக்கு வழிவகுக்கும்.
நெம்புகோல் போன்ற விளைவைப் பெறுவதற்கு வலது கணுக்கால் மற்றும் முழங்கால் அதீத வலிமையுடன் இருக்க வேண்டும். அங்கு காயம் ஏற்பட்டாலும் சிக்கல் தான்.
சமீபத்தில்
2023இல் கூட முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. உடல் தகுதி பிரச்சனை காரணமாக பல முக்கிய போட்டிகளை பும்ரா இழந்துள்ளார்.
2023 இல் மீண்டு வந்த பிறகு தனது பந்து வீச்சை சற்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.
எனினும் முந்தைய வலிமையை இழக்காமல் இருப்பது சிறப்பானது.
பும்ராவின் பந்து வீச்சின் சிறப்பு என்பது முழுக்க முழுக்க அவரது கடின உழைப்பாலும்
அவரது பிரத்யேக பந்து வீசும் முறைகளினாலும் கிட்டியுள்ளது.
இந்திய அணி கண்டெடுத்த சிறந்த பந்து வீச்சாளர்களுள்
ஏன் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களுள்
தனித்துவமான இடம்
நமது ஜஸ்ப்ரிட் சிங் பும்ராவுக்கு என்றென்றும் உண்டு.